டார்வின் 200
-கோவி. லெனின்
பழைய சிந்தனைகளிலிருந்து விடுபட மறுத்த உலகத்தை தங்களின் அரிய கண்டு பிடிப்புகளால் மாற்றம் பெறச் செய்தவர் களில் நால்வருக்கு முதன்மை பங்கு உண்டு. நாம் வாழும் புவி உருண்டையானது என்ற க—யோ, இயக்கவியல் கோட்பாட்டை நிறுவிய ஐன்ஸ்டீன், புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன், மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த உண்மைகளை வெளியிட்ட சார்லஸ் டார்வின் ஆகியோரே அந்த நான்கு முதன்மை அறிவியலாளர்கள். இவர்களின் கண்டுபிடிப்புகளே நவீன உலகின் அறிவியல் முன்னேற்றத்திற்கு அடித்தளம்.
இங்கிலாந்து நாட்டின் ஷிரூஸ்பரி நகரில் 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் பிறந்த சார்லஸ் டார்வின் இன்று உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு வயது 200.அவரது இருநூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தமிழகம் உள்பட உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப் படுகிறது. தான் பிறந்து 200 ஆண்டுகள் கழித்தும் தன்னை இந்த மனித சமுதாயம் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு மனித குலம் குறித்த மிக முக்கியமான ஆய்வுப்புரட்சியை நடத்தியவர் டார்வின். அப்படியென்ன புரட்சி?
உலகில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றையும் கடவுள் படைத்தார். அதுபோல, மனிதனையும் கடவுள் படைத்தார் என்பதே மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கையாக காலங்காலமாக இருந்து வந்தது. டார்வினின் ஆராய்ச்சி முடிவுகள் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து உண்மையை உலகுக்கு உணர்த்தின. எச்.எம்.எஸ் பீகிள் கப்பலில் இயற்கையியலாளராக பதவியமர்த்தப்பட்ட சார்லஸ் டார்வின் ஏறத்தாழ 5 ஆண்டுகள் அந்தக் கப்பலில் பயணித்து தென் அமெரிக்காவின் பசிபிக் கரையோரத்திலும் பசிபிக் கடலில் உள்ள சில தீவுகளிலும் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து 600 குறிப்பேடுகளில் தரவுகளைப் பதிவு செய்தார். மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி (படிமலர்ச்சி) பற்றிய டார்வினின் அரிய ஆய்வுகளுக்கு அந்தக் குறிப்பேடுகளே அடித்தளம்.
உயிரினங்கள் தங்களின் இயற்கையான தேர்ந்தெடுத்தலில் காரணமாகவே படிமலர்ச்சியை அடைகின்றன என்பதே டார்வினின் கோட் பாடாகும். பறவை, விலங்கு என ஒவ்வொரு உயிரினத்திற்கும் பொதுவான குணங்கள் இருந்தா லும் தனிப்பட்ட ஒவ்வொரு பறவைக்கும் விலங்குக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை டார்வின் தெளிவுபடுத்தினார். ஒரே தட்பவெப்பம் நிலவும் பகுதியில் வாழும் பறவை களில் சிலவற்றுக்கு வலிமையான அலகு இருக்கிறது. சிலவற்றுக்கு மென்மையான அலகு இருக்கிறது. சிலவற்றுக்கு நுண்மையான அலகு இருக்கிறது. வலிமையான அலகுகள் கொண்ட பறவைகள் பெரிய விதைகளை சாப்பிடக்கூடியனவாகவும், மென்மையான அலகுகளைக் கொண்ட பறவைகள் சிறிய விதைகளைச் சாப்பிடுபவையாகவும் நுண்ணிய அலகுகளைக் கொண்ட பறவைகள் புழு- புச்சிகளை சாப்பிடக்கூடியனவாகவும் இருப்பதை அவர் தன் ஆய்வில் உறுதி செய்தார்.
ஒரே இனத்தில் இத்தகைய மாறுபாடுகள் கொண்ட உயிரினங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் படிமலர்ச்சியை அடைந்து புதிய உயிரினங் களாக மாற்றம் பெறுகின்றன என்பதே டார்வினின் ஆராய்ச்சி. அதாவது, ஆதாம்-ஏவாள் மூலமாக மனித இனத்தைக் கடவுள் படைத்தார் என ஒரு மதமும், படைப்புக் கடவுளான பிரம்மாவி னால் மனிதர்கள் படைக்கப்பட்டார்கள் என இன்னொரு மதமும் பல நூற்றாண்டுகளாக மக்களின் மனங்களில் கருத்துகளைப் பதிவு செய்திருந்த நிலையில், அதற்கு முற்றிலும் மாறுபட்டிருந்தது டார்வினின் ஆராய்ச்சி. மனித இனம் என்பது தனித்துவமாகப் படைக்கப்பட்டதில்லை. ஒரு செல் உயிரி, பல செல் உயிரி என்ற படிமலர்ச்சியின் தொடர்ச்சி யாக ஒவ்வொரு உயிரினமாக உலகில் தோன்றின. அப்படி தோன்றிய உயிரினங்களின் வழியே, இயற்கையான தேர்வு முறையில் படிமலர்ச்சி பெற்ற இனம்தான் மனித இனம். சுருக்கமாகச் சொல்வதென்றால், குரங்கு இனத் தில் இயற்கைச் சூழலால் தனித்த குணங்களுடன் செயல்பட்ட ஒரு குழுவிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் படிமலர்ச்சி பெற்றவனே மனிதன்.
டார்வினின் இந்த ஆய்வு, அவர் காலத்திற்கு முன்பு வரை இருந்து வந்த மதம் சார்ந்த- மூடநம்பிக்கைகளுடனான அறிவியலை மதத்திற்கு அப்பாற்பட்ட பகுத்தறிவு சார்ந்த அறிவியலாக மாற்றியது என்கிறார் இருபதாம் நூற்றாண்டின் இயற்கைவியலாளரும் படிமலர்ச்சி ஆராய்ச்சியாளருமான எர்னஸ்ட் மேயர். இத்தகைய அறிவியல் புரட்சியை மதம் சார்ந்த உலகம் உடனடியாக ஏற்றுக் கொள்ளுமா?
படிமலர்ச்சி குறித்த டார்வினின் ஆய்வு களுக்கு எதிராக இங்கிலாந்து நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது கடவுளை மறுக்கும் கருத்து, நாத்திக கருத்து என மதரீதி யான எதிர்ப்புகள், அரசியல் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவை நடைபெற்றன. இது டார்வினை கலங்கச் செய்தது. அவ ருடைய ஆய்வுகள் புரட்சிகரமாக இருந்தனவே தவிர, டார்வின் புரட்சியாளர் அல்ல என்கிறார் அறிஞர் ஜான் பெலாமி ஃபாஸ்டர். படிமலர்ச்சி பற்றிய டார்வினின் புகழ்பெற்ற புத்தகமான உயிரினங்களின் தோற்றம் 1859ல் வெளியா
னது. தன் இறுதிக்காலத்தில் லண்டன் நகரிலிருந்து 15 கல் தொலைவில் உள்ள ஓர் ஊரில் வசித்தார் டார்வின். அவர் தனது ஆய்வுக் கோட்பாடுகளை, தானே தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை. உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகளை புதிய சிந்தனைகளோடு முடுக்கிவிடும் தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடரும் பணியை தாமஸ் ஹக்சிலி போன்றவர்களிடம் விட்டுவிட்டார்.
டார்வின் முன்வைத்த படிமலர்ச்சி கோட்பாடு இன்றளவிலும் பலவித மான ஆய்வுகளைக் கண்டு வருகிறது. மேற்குலக நாடுகளில் நிறத்தின் பெயரா லும் இனத்தின் பெயராலும் அடிமைத்தனம் நிலவி வந்த கால கட்டத்தில், உயிரினங்களின் தோற்றம் பற்றிய டார்வினின் ஆராய்ச்சி உண்மையிலேயே பெரும் புரட்சிதான். ஏனெனில், வெள்ளை இனம் எஜமானம் செய்யவும் கறுப்பினம் அடிமைத்தொழில் புரியவும் படைக்கப்பட்டவர் கள் என்ற ஒடுக்குமுறை சிந்தனையை உடைத்தெறியும் விதத்தில், மனிதர்கள் படைக்கப்படவில்லை. அவர்கள் இயற்கையான தேர்வு முறையில் உயிரினங்களின் படிமலர்ச்சி யின் விளைவாக உருவானவர்கள் என்ற டார் வினின் தத்துவம், ஆண்டான்-அடிமை கோட் பாட்டை உடைத்து நொறுக்குவதாக அமைந் தது. இந்தியாவிலும் பிறப்பினால் உருவாக் கப்பட்டுள்ள நால் வருணக் கோட்பாட்டுக்கு சம்மட்டி அடி தருவதாகவே இருக்கிறது டார்வினின் ஆராய்ச்சி முடிவு.
உலகில் உள்ள மனிதர்கள் ஏற்றத்தாழ்வற்ற சமஉரிமைகளுடன் வாழவேண்டும் என்ற பெருங்கனவுடன் பொதுவுடைமை எனும் அர சியல் விஞ்ஞானக் கோட்பாட்டை வகுத்தவர் களான காரல்மார்க்சும், ஃப்ரெடெரிக் எங்கெல் சும் டார்வினின் ஆய்வுகளை கவனத்துடன் அல சினர். உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தின் முதல் பதிப்பை வாங்கிப்படித்த எங்கெல்ஸ், இது முற்றிலும் சிறப்பானது என மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். டார்வினின் செயலை “அறிவியல் கண்ணோட்டத்தில் பெருங் காப்பியம்’ என வர்ணித்தார் காரல் மார்க்ஸ்.
ஆள்வதற்கும் ஒரு பிரிவும் அடிமையாக இருப்பதற்கு ஒரு பிரிவுமாக மனிதகுலம் படைக்கப்படவில்லை. மனித இனம் என்பது படைப்பால் வந்ததன்று. இயற்கையான தேர்வு முறையினால் வந்ததன்று என்கிற புரட்சிகரமான உண்மையை வெளிக்கொண்டு வந்தவர் அறி வியல் அறிஞர் சார்லஸ் டார்வின். அதனால் தான் மாபெரும் அறிஞர்கள் போற்றும் மகத் தான அறிஞராக இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னும் அவர் நினைக்கப்படுகிறார். டார்வினின் ஆய்வுகள் புதிய புதிய கோணங்களில் இன்றளவும் ஆராய்ச்சி செய்யப்படுவது அவரது பேராற்றலுக்கு கிடைத்துள்ள பெருமை.
No comments:
Post a Comment